பானகம்
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள். பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது. நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும்.
புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை :
வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்
Comments
Post a Comment