காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது? உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நம் உடல்,...