நிலவேம்பு குடிநீர் குறித்த விளக்கம்...
உலகத் தமிழ் இயற்கை மருத்துவத்தில் எல்லோருக்கும் தெரிந்த சித்த மருந்து ஒன்று உண்டென்றால் அது நிலவேம்புக்குடிநீர் அன்றி வேறொன்றுமில்லை என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு அங்கிங்கெனாதபடி தமிழகம் முழுவதுமே ஏன் உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களையும் சென்று சேர்ந்திருக்கிறது நிலவேம்புக்குடிநீர்.கூடவே நிலவேம்புக்குடிநீர் குறித்த ஐயங்களும் தொக்கி நிற்கின்றன.
சென்னையில் வெள்ளம் வடிந்த பின் பல இடங்களுக்கு நிலவேம்புக்குடிநீர் காய்ச்சிக் கொடுக்க சமூக ஆர்வலர்களுடன் சென்றிருந்தோம்.பல இடங்களில் பல்வேறு கேள்விகள்.துடுக்கான பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் கொடுத்த கசாயம் கடுங்கசப்பாய்,மணமில்லாமல் இருந்ததாகவும்,இங்கே மணமாக கசப்பு குறைவாய் இருந்ததாக வினவினர்.மூன்று வயதுடைய தனது மகனுக்கு கொடுக்கலாமா?என்பது ஒரு தாயாரின் கவலை தோய்ந்த கேள்வி.கசாயம் காய்ச்சும்போது தேன் சேர்க்கலாமா?முதியவரின் ஐயம்.கசாயம் குடித்த பின் வெல்லத்தை வாயில் அடக்கிக் கொள்ளலாமா?இளம் பெண்ணின் புன்னகை.உடன் வந்த சமூக ஆர்வலர் ஒரு மென்பொறியாளர்,”இந்த நீலவேம்பு(அவ்வாறுதான் உச்சரித்தார்) மரம் எங்கே இருக்கு சார்?”என்றார்.
ஒருநாளைக்கு எத்தனை முறைகுடிக்க வேண்டும்,தொடர்ந்து குடிக்கலாமா? நிலவேம்புக்குடிநீர் குடித்தால் சர்க்கரை அளவு குறையுமா?வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?தயார் செய்து எவ்வளவு நேரம் கழித்து அருந்து வேண்டும்?இரவு காய்ச்சி அடுப்பிலேயே வைத்திருந்து காலையில் குடிக்கலாமா?அனைத்து சுரத்திற்கும் இந்த கசாயம் மட்டும் போதுமா?இதய நோயாளிகள் குடிக்கலாமா?கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாமா?பாலூட்டும் தாய்மார்கள் குடிக்கலாமா?ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்க வேண்டும்?கசாயம் குடித்த பின் எவ்வளவு நேரம் கழித்து சாப்பிட வேண்டும்? என பல்வேறு வகையான கேள்விகள்.
சமூக வலைத்தளங்களையும்,நாளிதழ்களையும் கூட விட்டு வைக்கவில்லை நிலவேம்புக்குடிநீர்.ஏறத்தாழ அனைத்து நாளிதழ்களிலும்,வார,மாத இதழ்களிலும் நிலவேம்புக்குடிநீர் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றிருந்தது.சமூக வலைத்தளங்களை நிரப்பி இருந்தது நிலவேம்புக்குடிநீர் குறித்த கட்டுரைகள்.நிலவேம்பு பொடிக்கும்,நிலவேம்புக் குடிநீர் சூரணத்திற்கும் வேறுபாடு அறியாத பல பதிவுகள் சிரிப்பை வரவழைத்தன.
தயாரிப்பு முறைகள் குறித்த பல குழப்பங்கள் அதிலொன்று.இரண்டு கிராம் பொடியை 100 மிலி நீருடன் கலந்து மூடிவைத்து(!)அடுப்பேற்றி இலேசாக(!!) கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க சொல்லி அதிர்ச்சியூட்டியது.இன்னொரு பதிவில்,நிலவேம்புக்குடிநீர் தொடர்ந்து குடித்தால் மூட்டுவலி வருமே என புலம்பியதை பார்க்க முடிந்தது.
எப்பொழுதும் உயர்வு நவிற்சி அணியிலேயே நோக்கும் கும்பல் நிலவேம்புக்குடிநீர் குடித்தால் உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகும்,கருப்பை வலுப்பெறும்,நீரிழிவு குணமாகும்,இதய நோய் வராது காக்கும் என மிரட்டியது.
நிலவேம்புக்குடிநீர் குறித்த வினாக்களுக்கு விளக்கம்தான் என்ன என்பதை அறிவதற்கு முன் பொடி,சூரணம்,குடிநீர் சூரணம் பற்றிய விவரம் தெரிந்து கொள்ளலாம்.
பொடி என்பது தனித்த மூலிகையையோ,உலர் சரக்குகளையோ பொடித்து சலித்து எடுத்து கொள்வது.
சூரணம் என்பது ஒன்றிற்கு மேற்பட்ட உலர் மூலிகைகள்,உலர் சரக்குகள் இவற்றை தனித்தனியாகப் பொடித்து குறிப்பிட்ட அளவில் எடுத்து கலந்து சலித்து வைத்துக்கொள்வது.
பொடி போன்று மென்மையான பொடியாக இருக்காமல் குடிநீர் தயாரிப்பதற்கு ஏதுவாக ஒன்றிரண்டாக இடிக்கப்பட்டோ,அரைக்கப்பட்டோ இருக்கும்.குடிநீர் வேண்டப்படும் அளவிற்கு நான்கு மடங்கு அல்லது எட்டு மடங்கு நீர் விட்டு நாலில் ஒன்றாகவோ,எட்டில் ஒன்றாகவோ வற்ற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
சில குடிநீர் தயாரிக்க பதினாறில் ஒன்றாகக் கூட வற்ற வைக்க வேண்டிய தயாரிப்பு முறைகளை நூற்களில் காணாலாம்.
நிலவேம்புக்குடிநீர்ச் சூரணத்தில்,
நிலவேம்பு,வெட்டிவேர்,விலாமிச்சு வேர்,சுக்கு,மிளகு,பேய்புடல்,பற்படாகம்,சந்தனம்,கோரைக்கிழங்கு,ஆகிய சரக்குகள் சம அளவு எடுக்கப்பட்டு ஒன்றிரண்டாக அரைக்கப்பட்டு இருக்கும்.
நிலவேம்புக்குடிநீர்(கசாயம்) தயாரிக்கும் முறை:
குறைந்தது 30 கிராம் அளவு நிலவேம்புகுடிநீர்ச் சூரணம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு கொதிக்க வைத்து 250 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி, ஒரு பிளாஸ்கில் வைத்துக்கொண்டு காலை முதல் மாலை வரை ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு முறை 50 மில்லியாக குடித்து வரவும்.
அளவு:
பெரியவர்களுக்கு - 50மிலி
6 வயது முதல் 12 வயதுக்குள் - 30மிலி
3-6 வயதுக்குல் - 10-15மிலி
தீவிர சுரநிலையில் ஒரு நாளில் மூன்று முதல் ஐந்து வேளை அருந்தலாம்.இவ்வாறு மூன்று நாட்களுக்கு அருந்துவது நல்லது.கசப்பு,காரம் கலந்த மணமான நிலவேம்புக்குடிநீரே சுரத்தை தீர்க்க வல்லது,ஆகையால்,தேன் சேர்த்தல்,வெல்லம் சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்க்கலாம்.இளஞ்சூடாக இருக்கையில் அருந்துவது நன்று.நாட்பட்ட நோய்களுக்கு ஆங்கில மருந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களும்,கர்ப்பிணி பெண்களும்,பாலூட்டும் தாய்மார்களும் என எல்லா தரப்பினரும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம்.
சுரம் குறைந்து சுரத்தினால் ஏற்பட்ட அயர்ச்சி குறைய ஒரு நாளைக்கு ஒரு வேளை அருந்தலாம்.
சுரம் வராமல் தடுக்கும் பொருட்டு நோயெதிர்ப்புத்திறனை வலுப்படுத்த வாரம் ஒருமுறை மேற்குறிப்பிட்ட அளவில் காய்ச்சி குடும்பத்தினர் அனைவரும் அருந்தலாம்.
நிலவேம்புக்குடிநீர்,சுரத்தையும்,உடல் வலியையும்,இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதையும்,பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.சர்க்கரைநோயர்கள் நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து எடுக்கலாமா என்ற ஐயமெழுகிறது அல்லவா?நீரிழிவு நோய்க்கான மருந்தாக துவர்ப்பு சுவையுடைய மூலிகைகளையே தொடர்ந்து பயன்படுத்துவது நலம் தரும்.கசப்பு சுவையை நீரிழிவில் அதிக சர்க்கரையை குறைக்க குறிப்பிட்ட கால அளவில் பயன்படுத்தலாம்.தொடர்ந்து கசப்பு சுவையுடைய மருந்துகளை பயன்படுத்தினால் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்.ஆகையால் நீரிழிவு நோய்க்கு தொடர் மருந்தாக நிலவேம்புக்குநீரை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
நிலவேம்புக்குடிநீர் மட்டுமே அனைத்து சுரங்களையும் தீர்க்கும் அருமருந்து அன்று.குடிநீர் என்பது உடலில் எளிதில் உட்கிரகித்து உடனடி பலனை அளிக்க கூடிய அடிப்படையான எளிய தயாரிப்பு முறை மருந்து.
சுரத்திற்கு ஏராளமான மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
குளிகை,பற்பம்,செந்தூரம்,கட்டு என பல உயர்வகை மருந்துகள் ஏராளமாய் பயன்பாட்டில் உள்ளன.
சுரத்திற்கான எளிய அடிப்படையான மருந்து நிலவேம்புக்குடிநீர் என்ற புரிதலும்,சுரம் தொடர்ந்தால் சித்த மருத்துவர்களை அணுகி பிற மருந்துகளை பெற்றுக் குணமாகலாம் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை!
வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும் நல்ல முறையில் வாழ்ந்து சாதிப்போம் !
Comments
Post a Comment